பட்டாம்பூச்சி நினைவுகள்
விடுமுறை தினம் முன் தின பெய்திருந்த பெருமழையால் குளிர்ந்து தழுவும் காலை
தென்றல் கையில் காப்பி கோப்பையோடு வீட்டு வாசலில் நின்றிருந்தேன்.
பக்கத்து வீட்டு தோட்டத்து பெயர் தெரியாத சிறிய வெள்ளை பூக்கள் நிறைந்த
பசுங்கொடி என்னை வரவேற்பது போல காற்றுக்கிணங்கி தலையசைத்து கொண்டிருந்தது.
எங்கள் வீட்டு தோட்டத்தில் மல்லிகைப்பூவும் ரோஜாவும் உண்டு. பக்கத்து
வீட்டுத் தோட்டத்தில் செம்பருத்தியும், நந்தியாவட்டையும் மேலும் பல பெயர்
தெரியாத பூச்செடியும் இருக்கும்.
நான்கைந்து பட்டாம்பூச்சிகள் பக்கத்து வீட்டு தோட்டத்திற்கும் எங்கள்
வீட்டு தோட்டத்திற்கும் சிறு குழந்தைகள் போல ஓடி பிடித்து விளையாடிக்
கொண்டிக்கும். துரத்தி பிடிப்பது சலித்தது போல சில சமயம் பூக்களை சுற்றி
வரும். களைத்தது போனால் மலர்களில் அமர்ந்து இளைப்பாறும் பின் மீண்டும்
எழுந்து துரத்தி விளையாடும். கடந்த சில வாரங்களாகவே விடுமுறை தினங்களில்
இந்த காட்சி காணப் பெறுகின்றேன். இளம்பச்சை நிறத்தில் இருக்கின்றன இந்த
பட்டாம் பூச்சிகள். எனக்கென்னவோ வாரா வாரம் அதே பட்டாம் பூச்சிகள்
வருகின்றன எங்கள் தோட்டத்திற்கு என்று தோன்றுகின்றது. இந்த பட்டாம்
பூச்சிகளுக்கு எப்படி எங்கள் தோட்டம் அடையாளம் தெரிகின்றது? இரவு
நேரங்களில் இந்த பட்டாம் பூச்சிகள் எங்கே உறங்கும்? ஒரு பட்டாம் பூச்சி்
தன் தோழமை பட்டாம் பூச்சி எப்படி கண்டுணரும்?************
பட்டாம்
பூச்சிகளுக்கு என்ன அப்படி ஒரு அதிசய குணம் பெயர் கேட்ட மாத்திரம் மனம்
பறக்க ஆரம்பித்து விடுக்கின்றது. ஒரு முறை சென்னை பல்லாவரம் அருகில் உள்ள
திருநீர்மலையில் ரங்கனை தரி்சிக்க சென்றிருந்த போது கோவிலை சுற்றி வந்து
கொண்டிருந்த சமயம் இரண்டு பட்டாம் பூச்சிகள் ஒன்றன் கீழ் மற்றாக ஒரு
வட்டத்தில் எதிர் எதிர் திசையில் சுற்றிக் கொண்டிருந்தன. அவை நீண்ட நேரம்
வேறு எங்கும் பறக்காது ஒன்றை ஒன்று சுற்றியபடி இருந்தன.
"இன்றாக நாளையே ஆக இனிச்சிறிது,நின்றாக நின் அருள் என்பாலதே - நன்றாக
நான் உன்னையன்றி இலேன் கண்டாய் நாரணனே
நீ என்னை அன்றி இலை"
திருமழிசையாழ்வார் சொன்னது போல நான் இன்றி நீ இல்லை என்பது அறியாமல் அவனை நாம் சுற்ற நம்மை சுற்றி கொண்டிருக்கின்றான் அவன். அப்பட்டாம்பூச்சிகள் போல் நாமும் அவனும்.
************
பட்டாம்பூச்சிகளுக்கும் ரோஜாக்களுக்கும் ஒரே குணம் தான். ரோஜா காய்ந்தால் கூட நிறம் வாடுவதில்லை. பட்டாம்பூச்சிகளும் அப்படியே அவை இறந்த பின்னும் கூட அதே அழகோடும் நிறத்தோடும் இருக்கும்.
வீட்டில் அக்காவிற்கு பனிரெண்டாம் வகுப்பு உயிரியல்
சம்மந்தப்பட்ட கோப்புகளுக்கு தேவையான பூக்கள், செடி கொடிகள்
மற்றும் பட்டாம்பூச்சிகள் இன்னபிற என்று சேகரித்து தருவது எனக்கு
அந்த வயதில் வார இறுதிக்கான பொழுது போக்கு.அதிலும் பட்டாம் பூச்சிகள் பிடிக்க பெரும்வெளியில் அதன் பின் ஓடுவது இப்போது நினைத்தாலும் மகிழ்வான தருணம். பட்டாம் பூச்சிகளை பிடித்ததும் கையில் மகரந்தம் ஒட்டிக் கொள்ளும் அதை அப்படியே கையோடு கொண்டு சென்றிருக்கும் ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டு மூடி நிறைய பூங்கொத்துகள் மற்றும் பட்டாம்பூச்சிகளோடு வீடு சேர்வது மிக அற்புதமான உணர்வு.
பட்டாம்பூச்சிக்கு வேதனையாக இருக்குமோ என்ற எண்ணமெல்லாம் அப்போது நினைத்து பார்க்கும் அளவிற்கு சிந்தனையில்லை. பூக்களை சேர்ப்பது போல பட்டாம்பூச்சி பிடிப்பதும் ஒரு பிடித்த விளையாட்டு அவ்வளவே.
பின்
நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது ஒரு
வித்தியாசமான கதை. நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது எங்கள்
செட்டுக்கென புதிதாக ஒரு அறிவிப்பு வந்தது. கணித
குழுவெடுப்பவர்கள் உயிரியல் பாடம் எடுக்க இயலாது, கணினி அறிவியல்
தான் எடுக்க வேண்டுமென்று. தாவரவியலில் அக்கா பட்டப்படிப்பு
படிப்பதால் அவள் வரையும் படங்களை கண்டு மிரண்டு போன எனக்கு இது
ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.ஒரு வருடம் கணினி அறிவியல் படிக்கிறேன் பேர்வழி என்று ஆனந்தமாக படித்தோம். கணினித்துறையையே வாழ்க்கையாக தேர்தெடுக்க வேண்டும் என்று நினைத்ததும் அந்த காலகட்டத்தில் தான். ஆனால் சந்தோசம் ஒரு வருடம் மட்டுமே நீடித்தது.
பனிரெண்டாம் வகுப்பில் நுழையும் தருணம் பள்ளியில் திடிரென கணினி அறிவியலுக்கு பதிலாக உயிரியலே இருக்கும் என்றும் பதிரொன்றாம் வகுப்பு பாடங்களையும் சேர்த்து படிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதல்
வாரமே உயிரியல் ஆசிரியை சில ரெக்கார்ட்களையும் மேலும் பூக்கள்
மற்றும் பட்டாம்பூச்சிக்கான கோப்புகளையும் தயாரிக்க சொல்லி
இருந்தார். எப்படியோ கஷ்டப்பட்டு ரெக்கார்ட் வேலைகளை செய்து
முடித்தேன்.ஆனால் பூக்களை பட்டாம் பூச்சிகளை ஒட்டி கோப்பு தயாரிக்கவில்லை. ஏனோ பட்டாம் பூச்சிகளை கொல்ல மனம் வரவில்லை. திங்கள் அன்று வகுப்புக்கு சென்றதும் முதல் வகுப்பே உயிரியல். அந்த ஆசிரியை கோப்பு செய்து வராத காரணத்தால் கையில் பிரம்பால் அடித்தார். கை நன்றாக சிவந்து போனது.
எனக்கு தெரிந்து என் அம்மாவிற்கு அடுத்தபடியாக பள்ளியில் அடிவாங்கியது இந்த ஆசிரியையிடமே. ஆனால் அந்த வார இறுதியிலேயே மீண்டும் கணினி அறிவியலே இருக்குமென்ற அறிவிப்பு வந்துவிட்டது.
தப்பித்தோம் நானும் பட்டாம்பூச்சியும்.
No comments:
Post a Comment