முக்கால் கிணறு
மதுரை களம், இருநூறு ஆண்டுகால இடைவெளி, பேச்சு, உடை. வழக்கு, அரசியல், வன்முறை என நமது மறந்து போன சொந்த வரலாறைப் பார்த்தது மாதிரி இருந்தது அரவான். நிறைய நுணுக்கமான காட்சிகள், ஜஸ்ட் லைக்தட் மாதிரி வந்து போகிற யதார்த்தம், உண்டியலின் வாயிலிருந்து வெளியே செல்லும் கோணம், கொலையின் பார்வைகோணம், கண்களாலேயே பெருமிதம் காட்டும் நடிகன், காட்சியிலிருந்து வெளியே துப்பிவிடமாட்டாத நிலங்கள், “பாலை” நில குறியீடுகள் என பார்த்து பார்த்து உழைத்திருக்கிறார்கள்... ஒரு புதுமையான “களத்தைச்” சொன்ன விதத்தில் வசந்தபாலனுக்கும் சரி, தமிழ் சினிமாவுக்கும் சரி, அரவான் ஒரு முக்கியமான படம் தான்...
ஆனால்....
திரைக்கதைதான் ஒரு சினிமாவைத் தீர்மானிக்கும் சக்தி. அரவானில் கிணற்றைத் தாண்ட முடியாமல் உள்ளே விழும் பசுபதியைப் போல முக்கால் கிணற்றைத் தாண்டி உள்ளே விழுகிறது திரைக்கதை. ”எப்படி” மற்றும் “எதற்கு” போன்ற கேள்விகள் படத்தில் சில இடங்களில் அதுவும் முக்கியமான இடங்களில் துருத்திக் கொண்டு நிற்கிறது. சுவாரசியமாகச் செல்லவேண்டிய திரைக்கதை அசுவாரசியத்திற்குத் தள்ளப்படுகிறது... ஆதி, நிலவைத் தள்ளுவது போல. :) (வரலாற்று) புலனாய்வு திரைப்படத்திற்குத் தேவையானது ”ஆதிமுடிச்சு”! படத்தில் அப்படி எங்கும் முடிச்சு போட்டு அவிழ்த்ததாகத் தெரியவில்லை, கொலைகாரனைக் கண்டுபிடிக்க புதுக்கதையை உருவாக்க வேண்டியிருக்கிறது, இன்னார்தான் கொலைகாரன் என்பதை ஒரு முடிச்சு மூலமாக முதலிலேயே சொல்லிவிடும் யுக்தி பின் அதனை நோக்கிப் பயணப்படும் ஆதியின் வேட்டை என திரைக்கதையை அப்படியே மாத்தியமைத்திருக்கலாம்.. பசுபதியை முக்கியப்படுத்தாமல் ஆதியின் கோணத்திலேயே கதை செலுத்தியிருக்கலாம்...மேலும் காளைகள் வரும் சிஜி காட்சிகள் தேவையற்றது! இப்படி நிறைய யோசனைகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்த கதை தோற்றால் அடுத்து பீரியட் படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். தமிழில் சொல்லப்படாத களங்கள் ஏகப்பட்டது உண்டு. அதில் ஒன்றிரண்டேனும் சிறப்பாக அமையும் வாய்ப்பும் இருக்கிறது. அதற்காகவேனும் அரவான் ஜெயிக்கணும்!!
No comments:
Post a Comment