Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Thursday, 17 May 2012

மறக்க முடியாத  அனுபவங்கள்



ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் பல சமயம் சில சுவராசியமான சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதை நம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.  என் வாழ்க்கையிலும் அதுபோல் ஒரு சம்பவம் நடந்து முடிந்தது. அதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. 

அப்போது நான் வெளிநாடு போக முயற்சி செய்து கொண்டிருந்த சமயம்.  அதற்காக அடிக்கடி மும்பை போய்வந்து கொண்டிருப்பேன்.  என்னுடைய நண்பன் குருமூர்த்தி ஒருநாள் என்னிடம் வந்தான்.  மாப்ள, நானும் வெளிநாடு போக ஆசைபடுகிறேன், என்னையும் உன்னோடு அழைத்து போ என்று கோரிக்கை வைத்தான்.  அவனுக்கு இங்கிலிசும் தெரியாது, இந்தியும் தெரியாது.  எனக்கு இரண்டுமே தெரியும் என்பதால் என்னுடன்வர ஆசைபட்டான். 

மிகுந்த யோசனைக்கு பிறகு, சரி வாடா என்று ஒரு நாள் மூட்டை முடிச்சு சகிதமாக சென்னை வந்து சென்ட்ரலில் ரயில் பிடித்து ஒரு மாதிரி முட்டி மோதி மும்பை வந்து சேர்ந்தோம்.  மும்பை வந்து ஒரு லாட்ஜு எடுத்து தங்கி விசா வேலைகளை முடித்து கொண்டு ஊருக்கு கிளம்ப முடிவு எடுத்தோம்.

இரவு வி.டி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கிளம்பும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம்.  இரவு பத்து மணிக்கு கிளம்ப வேண்டிய ரயிலுக்காக இரவு எட்டு மணிக்கே ரயில் நிலையம் வந்து ரயிலுக்காக காத்து இருந்தோம்.  ஒன்பது மணிக்கு ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்தார்கள். என்னவென்றால், பத்து மணிக்கு வர வேண்டிய ரயில் எட்டு மணி நேரம் தாமதமாம்.  எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  காரணம் லாட்ஜு வேறு அக்கௌன்ட் முடித்து விட்டு வந்தாயிற்று. 

வேறு வழியில்லாமல் ரயில் நிலையத்திலேயே படுத்து காலை எழு மணிக்கு ரயிலை பிடிக்கலாம் என்று முடிவு செய்தோம்.  பொதுவாக வீட்டில் கையை காலை நீட்டி வசதியாக படுத்தாலே தூக்கம் வர மறுக்கும் நமக்கு அசௌகரியமான அந்த ரயில் நிலையத்தில் தூக்கம் வந்து விடுமா என்ன?.  பாதி தூங்கியும் பாதி முழித்தும் ஒருவாறாக இரவை கழித்தோம். 

எப்படா விடியும் ரயிலை பிடிக்கலாம் என்று தூங்கி வழியும் முகத்தோடு காத்து கிடந்த எங்களுக்கு அந்த அதிகாலை நாங்கள் செல்ல வேண்டிய ரயில் காலை எழு மணி அளவில்  குறிப்பிட்ட பிளாட்பாரம் வந்து சேர்ந்தது.
உடனே நண்பனும் நானும் எங்கள் இடத்தை பிடிக்க பெட்டி சகிதம் ஓடினோம்..ஓடினோம்...ரயிலின் எல்லைக்கே ஓடினோம்.  அட்லீஸ்ட் ரயில் பெட்டியிலாவது கொஞ்ச நேரம் குறட்டை விட்டு தூங்கலாமே என்றுதான். 

ஒருவழியாக இடத்தை பிடித்து சாமான்களை வைத்து விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பாலாபோன என் நண்பன் டே மாப்ள வண்டி கிளம்பறதுக்குள்ளே வாட ஒரு டீ சாப்பிடலாம் என்று கூப்பிட்டான்.  நான் உடனே மாப்ள நீ வண்டியிலே இருந்து சாமானை பார்த்துக்கோ நான் சென்று டீ சாப்பிட்டுவிட்டு உனக்கு வாங்கிகொண்டு வந்து விடுகின்றேன் என்று சொல்லி விட்டு நான் பெட்டியை விட்டு கீழிறங்கி டீ கடையை தேடி போனேன்.  காலை நேரம் என்பதால் இன்னும் கடை திறந்தபாடில்லை.  நேற்று தூங்கி கொண்டிருந்த இடத்திருக்கு அருகே இருந்த கடைக்கு சென்று டீ அருந்தலாம் என்று சென்று மாஸ்டரிடம் சூடாக ஒரு டீ ஆர்டர் செய்து கொண்டிருக்கும்போதே ஒலி பெருக்கியில் ரயில் கிளம்ப ஆயத்த அறிவிப்பு வந்து சேர்ந்தது. ஆகா நேரமாகி விட்டதே என்று மாஸ்டர் கொடுத்த டீயை அவசரமாக உறிஞ்சி கொண்டிருக்கும் போதே ரயில் மூவாக ஆரம்பித்து விட்டது.  மாஸ்டரிடம் காசை எறிந்துவிட்டு ரயிலை பிடிக்க ஓடினேன்..ஓடினேன்..ஓடிகொண்டே இருந்தேன்.



இரவு ரயில் தாமதமாகையால் எடுக்கும் போதே மிகவும் விரைவாக எடுத்ததினால் என்னால் ரயிலின் கடைசி பெட்டியை கூட பிடிக்க முடியவில்லை.  அவ்வளுவுதான் ரயில் சென்று விட்டது. நான் பிளாட்பாரத்தின் கடைசி வரை ஓடியும் ரயிலை பிடிக்க முடியவில்லை.  இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் என் நண்பன் அங்கே ரயிலில் பெட்டி படுக்கைகளோடு. ஆனால் டிக்கெட், காசு எல்லாம் என்னிடம்.  கொஞ்சம் யோசனை பண்ணி பாருங்கள் என் நிலைமையை.  என் நிலைமை கூட ஓகே. காரணம் என்னிடம் டிக்கெட் உள்ளது, காசும் உள்ளது.  ஆனால் என் நண்பனிடம் இவை எதுவுமே இல்லை.  மேலும், இந்தியும், இங்லிசும் அவுட். 

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் ரயிலை பிடிக்க ஓடியதையும், திகைத்து நிற்பதையும் பார்த்த சிலர் என்னவென்று விசாரிக்க நடந்த எல்லாவற்றையும் விவரித்தேன்.  உடனே அவர்கள் இந்த ரயில் அடுத்தது தாதர் ரயில் நிலையத்தில் நிற்கும் உடனே சென்றால் பிடித்து விடலாம் என்று சொல்ல, விரைவாக செயலில் இறங்கினேன்.  பஸ் பிடித்து போனால் லேட் ஆகி விடும் என்று ரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்தேன். ஆட்டோ டிரைவரிடம் விசயத்தை சொல்லி வண்டியை ஸ்பீடாக ஓட்ட சொல்லி மும்பையின் காலை நேர டிராபிக் சமாளித்து ஒருவழியாக தாதர் வந்து ஆர்வத்துடன் உள்ளே சென்று பார்த்தால் எனக்கு கிடைத்த பதில் இப்போதான் அந்த ரயில் தாதரில் நிற்காமல் சென்று விட்டது என்றார்கள். மேலும் புனே சென்றால் பிடித்து விடலாம் என்றும் சொன்னார்கள்.  எனக்கு நம்பிக்கை போய்விட்டது.  இப்போது இருப்பது போல அப்போது செல் போன் கிடையாது.  இருந்தால் என் நண்பனுக்கு போன் செய்து எதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்க சொல்லி இருக்கலாம். 

என்ன செய்யலாம் என்று ஒரு நிமிடம் யோசித்தேன்.  சென்னைக்கு அடுத்த ரயில் மாலை எழு மணிக்கு அதே தாதரில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் புறப்படும் என்று சொன்னார்கள்.  சரி இதற்கு மேல் கொடுப்பினை இருந்தால் என் நண்பனை சநதிப்போம் என்று மனதை தேற்றி கொண்டு தாதாரிலேயே காலை உணவை முடித்து கொண்டு மன விரக்தியாலும் அலைச்சலினாலும், முந்தைய இரவில் தூக்கம் சரியாக இல்லாததினாலும் அப்படியே அசதியில் அங்கேயே தூங்கிவிட்டேன்.  பிறகு மதியம் முழித்து மதிய உணவையும் அங்கேயே முடித்து கொண்டு என் நண்பனை பற்றி ஏதோதோ யோசனை செய்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டும் அங்கேயே பொழுதை கழித்தேன்.  மறுபடி இரவு எழு மணியானது.  நான் போக வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் உள்ளே நுழைந்தது.

டிக்கெட் முன் பதியாமல் மும்பைக்கும் சென்னைக்கும் சென்று வருபவர்களுக்கு தெரியும் ரயிலில் இடம் பிடிப்பது எந்த அளவுக்கு கஷ்டம் என்று.  எப்படியோ ஒருவழியாக ஜன்னல் ஓரம் சீட்டை பிடித்து அமர்ந்து என் அருகே அமர்ந்திருந்தவரிடம் நடந்தவைகளை பரிமாறி கொண்டே ஆசுவாசபடுத்தி கொண்டேன்.  அடுத்த 24 மணி நேரத்தில் ரயில் சென்னை வந்து சேர்ந்தது. அங்கிருந்து பஸ் பிடித்து ஊருக்கு வந்தேன். 

வரும் வழி எல்லாம் என் நண்பனை பற்றிய யோசனைதான்.  அவன் என்ன ஆனானோ? எங்கே இருக்கானோ? சாப்பிட்டனா? இல்லையா? அவன் அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவது? இப்படி நிறைய கேள்விகளையும், கவலைகளையும் மனதில் தேக்கி வைத்து கொண்டு அதிகாலை வீட்டுக்கு வந்து கதவை தட்டினேன்.  என் அம்மாதான் வந்து கதவை திறந்தார்கள். உள்ளே போனேன்.  எங்கேடா அவன் என்று கேட்டார்கள்.  வாசல் படியிலேயே நின்றுகொண்டு நடந்த எல்லாவற்றையும் சிறிது அழுகையுடன் சொன்னேன்.  எல்லாவற்றையும் கேட்ட என் அம்மா கொஞ்சம் கூட அதிராமல் அமைதியாக சொன்னார்கள். சரி சரி அழுவாதே. உள்ளே வா என்றார்கள்.  அமைதியாக உள்ளே சென்ற எனக்கு அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது.  அது என்ன என்பது இந்நேரம் உங்களுக்கு புரிந்து இருக்கும்.  அதை பற்றி அடுத்த பதிவில் சொல்லுகிறேன். (தொடரும்...)

No comments:

Post a Comment