Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Thursday, 10 May 2012

சென்னையில் வெறி நாய் தொல்லை அதிகரிப்பு: மாநகராட்சி பிடித்தால் புளுகிராஸ் சண்டைக்கு வருகிறது

சென்னையில் இப்போது வெறிநாய் தொல்லை பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. மக்கள் தொகை பெருகி வருவது போல் வெறி நாய்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. வீடுகளில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்போர் அதை முறையாக பராமரித்து தடுப்பூசி போட்டு வெளியில் விடாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
 
ஆனால் பெரும்பாலானோர் நாய் வளர்க்கிறோம் என்று சொல்லி அதை தெருவில் விட்டு விடுகிறார்கள். இவ்வாறு தெருவில் விடப்படும் நாய்கள் குட்டி போட்டு பல மடங்காக பெருகி வருகிறது. அவை முறையாக பராமரிக்கப்படாததால் கிருமிகள் தாக்கி சொறி பிடித்து வெறிநாயாக அலைகின்றன.
 
சென்னை நகரில் சர்வ சாதாரணமாக வெறி நாய்கள் திரிவதை எந்த இடத்திலும் காணலாம். இரவில் மக்கள் நடமாட முடியவில்லை. ஊளையிட்டுக் கொண்டு சத்தம் போடுவதால் வீடுகளில் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இரவில் கூட்டம் கூட்டமாக அலைகின்றன. இரு சக்கர வாகனத்தில் சென்றால் துரத்திக் கொண்டு வருகிறது. அதில் பயணம் செய்வோர் பீதியில் கால்களை தூக்கி வைத்துக் கொண்டு சென்றால்தான் தப்பிக்க முடியும்.
 
ஜெ.ஜெ.நகர், முகப்பேர், அம்பத்தூர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், ஓட்டேரி, படாளம், சூளைமேடு, வடபழனி பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. தெரு நாய் தொல்லை பற்றிய புகார்களை கவனிக்க மாநகராட்சியில் தனி பிரிவு செயல்படுகிறது. அவர்களும் தகவல் தெரி விக்கும் இடத்துக்கு வந்து நாய்களை பிடித்துச் செல்கிறார்கள். வெறி நாய்களை ஊசி போட்டு கொல்ல விடாமல் மிருக வதை சட்டம் அவர்களை தடுக்கிறது. மீறி கொன்றால் புளு கிராஸ் போன்ற அமைப்புகள் சண்டைக்கு வருகிறது.
 
யாரும் வீட்டு நாய்களை பிடிக்கவோ துன்புறுத்தவோ இல்லை. தெருவில் வெறி பிடித்து திரியும் கொடிய விஷம் கொண்ட நாய்களைத்தான் பிடித்து அழிக்கிறார்கள். தற்காப்புக்காக மனிதனையே என் கவுண்டர் செய்யும் இந்த காலத்தில் வெறி நாய்கள் மீது கருணை காட்டுவதை பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். கடந்த 7-ந்தேதி அம்பத்தூரில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் தமீனை வெறி நாய் கடித்தது. தடுப்பூசி போட்டும் சிறுவன் குணமடையவில்லை.
 
கொடிய விஷம் கொண்ட நாய்க்கடிக்கு கடைசியில் அந்த சிறுவன் பலியாகிவிட்டான். இந்த சிறுவனையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் 4 பேர் வெறி நாய் கடிக்கு பலியாகிவிட்டனர். கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 21 பேர் இறந்தனர் என்று மாநகராட்சி புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகம் 2009-ல் 13 பேரும், 2010-ல் 12 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.
 
ஆனால் 2011-ல் 21 பேர் பலியானதால் வெறி நாய் கடி பல மடங்கு அதிகரித்து இருப்பதையே காட்டுகிறது. எனவே வெறி நாய் கடியை தடுக்க தயவுதாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
சிறுவன் பலியான அம்பத்தூர் பகுதி மக்கள் கூறியதாவது:-
 
எங்கள் பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. மாநக ராட்சியில் சொன்னால் பிடித்து போய் தடுப்பு ஊசி போடுகிறார்கள். சில நாய்கள் தப்பி மீண்டும் வந்து விடுகின்றன. அவை முன்பை விட அதிக வெறியுடன் அலைகிறது. மனிதனையே கருணை கொலை செய்ய கோர்ட்டுக்கு போகும் இந்த காலகட்டத்தில் கொடிய விஷம் கொண்ட வெறி பிடித்த நாய்கள் மீது புளு கிராஸ் போன்ற அமைப்புகள் கருணை காட்டுவது ஏன்? வெறி நாய்களை கொன்றால் எதிர்க்கும் இவர்கள் தெருவில் திரியும் நாய்களை பிடித்துச் சென்று வளர்க்க வேண்டியதுதானே, போதாக்குறைக்கு புளுகிராஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் தெருவில் நாய்களுக்கு பிஸ்கட் போட்டு செல்கிறார்கள்.
 
இதனால் வெறி நாய்கள் மேலும் சர்வ சாதாரணமாக திரிகின்றன. அவர்களுக்கு நாய்கள் மீது இரக்கம் இருந்தால் வீட்டுக்கு கொண்டு சென்று பிஸ்கட் போட்டு வளர்க்கட்டும் தெருவில் பிஸ்கட் போட்டு அதை மேலும் தெருவில் திரிய விட வேண்டாம். வெறி நாய் கடித்து எங்கள் பகுதியில் சிறுவன் பலியாகிவிட்டான். இதற்கு புளு கிராஸ் அமைப்பு பொறுப்பு ஏற்குமா? நாய்த் தொல்லையை ஒழிக்க இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். நாய்களை கொல்லாதே என்று சொல்லிவிட்டு இவர்கள் பங்களாவில் இருந்து விடுவார்கள். பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தானே. எனவே மாநகராட்சி ஊழியர்கள் இவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.
 
சென்னை நகரில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு தினமும் 75-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள் என்று ஆஸ்பத்திரி புள்ளி விவரம் மூலம் தெரிகிறது. நாய் கடிக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிகள் இருப்பதால் உரிய சிகிச்சை பெற்று திரும்பிச் செல்கிறார்கள். இதற்காக நீண்ட கியூ நிற்பதை காலை 8 மணிக்கு பார்க்க முடியும். நாய் கடியை அலட்சியப்படுத்தக் கூடாது. கட்டாயம் தொடர் சிகிச்சை பெற வேண்டும். இல்லை யெனில் விஷம் தலைக்கு ஏறி மரணம் ஏற்படும் என்று அரசு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
 
சென்னை நகரில் நாய் தொல்லை பற்றி தினமும் 60 போன் கால்கள் வருவதாக வும், உடனுக்குடன் சென்று நாய்களைப் பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்து அனுப்புவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித் தனர். சென்னையில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தெரு நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய 6 வாகனம் உள்ளது. நாய்களின் இனப் பெருக்கத்தை தடுக்க 1 வருடத்திற்கு 60 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து தடுப்பூசி போடுகிறோம். எனவே நாய் தொல்லை குறித்து பொது மக்கள் 1913 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றனர்.
 
வேளச்சேரியில் உள்ள புளுகிராஸ் அமைப்பின் பொது மேலாளர் ஜான் வில்லியம் கூறியதாவது:-
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாய் அதிக மாவதற்கு கோழிக்கடை வீதிக்கு வீதி புற்றீசல் போல் வந்ததுதான் காரணம். 1 கிலோ சிக்கனில் 200 கிராம் கழிவு சேரும். இதை தெரு குப்பை தொட்டியில் போடும் போது நாய்கள் வந்து விடும். நாய்களுக்கு தொடர்ந்து உணவு, தண்ணீர் கிடைப்ப தால் எண்ணிக்கை அதி கரித்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு செய்கிறோம். தினமும் 30 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுகிறது. ஒரு தெருவில் 4 நாய் இருந்தால் தினமும் 5 புது நாய்கள் வந்து விடுகிறது. இவை சண்டை போடும் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. நாய்களுக்கு பவுண்டரி இல்லாததால் இவற்றை பிடித்து அடைக்க முடியாது.
 
அதனால்தான் சுதந்திரமாக சுற்றி திரிகிறது. நாய்களை ஊசி போட்டு கொல்வதை அனுமதிக்க முடியாது. நாயை சாகடிப்பது தீர்வாகாது. அதற்கு குடும்ப கட்டுப்பாடுதான் சிறந்த வழி. அதை நாங்கள் செய்து வருகிறோம். எங்காவது தெரு நாய் தொல்லை அதிகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் அல்லது அரசு அலுவலர்கள் தங்கள் லெட்டர் பேடில் மாநகராட்சிக்கும் புளுகிராசுக்கும் புகார் கொடுத்தால் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்து அனுப்புவோம். நாய் கடித்து விட்டால் ஆஸ்பத்திரியில் ஊசி போட்டு விட்டு எங்களுக்கு புகார் தெரிவிக்கலாம். அந்த நாய்களை பிடிப்போம்.   நாய் துரத்தினால் நாம் ஓடக் கூடாது. ஓடினால்தான் கூடுதலாக விரட்டும். ஓடாமல் நின்று விட்டால் நாய் நின்று விடும். அதே போல் நாய் மீது கல் வீசாதீர்கள். கோபம் வந்து கடித்து விடும். பொதுவாக அவரவர் தெரு நாய் விரட்டாது. புது நாய் தான் விரட்டும்.
 
எனவே நாய் தொல்லை குறித்து புளு கிராஸ் தொலை பேசி எண் 22354959, 22300666 ஆகியவற்றுக்கு புகார் தெரிவிக்கலாம். நாங்கள் பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment