சகியே
ஒருமுறை அலுவலகத்தில் இருந்து திரும்பிவந்த போது கோபமாய் இருந்தாய். திருமணத்துக்கு இரு ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்த மொக்கை கவிதைகளை காட்டி, "யாரை நினைத்து எழுதுயது இது?" என சண்டையிட்டாய். அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே, இன்று வரை அதை அனுபவித்ததில்லை நான். ஆஹா நம் மீதும் பொசசிவ்வாய் இருக்க ஒரு பெண் இருக்கிறாளே!!! . நம்மாலும் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க முடிந்திருக்கிறதே!!! என்று.
உறவிலும் சரி, நட்பு வட்டாரத்திலும் சரி என்றும் நான் முதன்மையாகவோ, முக்கியமான நபராகவோ கருதப்பட்டதில்லை. வந்தால் சரி என்பார்கள். வராவிட்டால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். நீ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டா என்ற பூச்செண்டை யாரும் எனக்கு கொடுத்ததில்லை. ஒரு முறை உன் ஊர் திருவிழாவுக்கு சென்றிருந்தாய். நான் தொலைபேசியில் அழைத்த போது சொன்னாய் "போன தடவை ஒவ்வொண்ணுக்கும் கமெண்ட் அடிச்சு சிரிக்க வச்சீங்க, இந்த தடவை நீங்க இல்லாம ஒரே போர்". கால காலமாய் பூச்செண்டு எதிர்பார்த்தவனுக்கு ஆர்கிட் மலர் தோட்டம் அந்த பதில்.
ஜாதி, ஜாதகம் பார்த்து திருமணம் செய்கிறார்களே என்று சமுதாயத்தின் மீது ஒரு வெறுப்பு இருந்தது. காதல் திருமணங்கள் மட்டும் தான் நடக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் இப்போதோ சமுதாயத்தை வணங்கிக்கொண்டிருக்கிறேன். பெண்களை துளியளவு கூட இம்ப்ரெஸ் பண்ண இயலாத தோற்றம், ஆரம்பித்த உடனேயே அறுக்காதடா என நண்பர்களே புலம்பும் அளவுக்கு போரான என் பேச்சு, சராசரி அறிவு, அதற்க்கும் கீழான வசதி என இருந்த எனக்கு உன்னைப்போல் ஒரு தேவதையை எப்படி காதலித்து அடையமுடியும். வாழ்க ஜாதி,ஜாதகம்.
இதுவரை நான் அடைந்த தோல்விகளெல்லாம் உன்னை திருமணம் செய்ததால் அர்த்தமற்றதாகிப் போய்விட்டது.
எவ்வளவு அழைப்பு வார்த்தைகள் இருந்தாலும் உன்னை அழைப்பது சகி என்று தான். தொடர்ந்து இதுபோலவே என்னை சகித்துக்கொள் என்று வேண்டிக்கொள்ளத்தான்.
No comments:
Post a Comment