Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Saturday, 14 April 2012



எங்கிருந்து வருகிறது? எங்கே போகிறது?: மாநகர பஸ் போர்டுகளால் பயணிகள் கடும் குழப்பம்



சென்னையில் மாநகர பஸ் ஏறணும்னாகூட பெரிய படிப்பெல்லாம் படிக்கணும் போலிருக்கே...? என்னப்பா இது எந்த பஸ்சை பார்த்தாலும் ரெண்டு ரெண்டு ஊர் பெயர் போட்டிருக்காங்க... எந்த ஊருக்கு போகுது? எந்த ஊரில் இருந்து வருது? ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே?
 
வெளியூர்களில் இருந்து கோயம்பேடு பஸ்நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் வந்து இறங்கி பஸ்சுக்காக அலையும் பயணிகளின் புலம்பல்தான் இது!
 
மாநகர பஸ்களில் வில்லிவாக்கம்-பட்டினப்பாக்கம், அம்பத்தூர்-வேளச்சேரி... இந்த மாதிரி நிரந்தரமாக போர்டை மாட்டி உள்ளார்கள். அம்பத்தூரில் இருந்து ஒரு பயணி கோயம்பேட்டுக்கோ அல்லது வேளச்சேரிக்கோ ஏறுவதற்கு சிரமம் இல்லை. ஆனால் நடுவழியில் ஏறுபவர்கள்தான் இந்த பஸ் எந்த ஊருக்கு செல்கிறது என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள்.
 
வெளியூர்களில் இருந்து வேலை தேடி, நண்பரை தேடி, உறவினர் வீடுகளுக்கு என்று பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்னை வருகிறார்கள். அவர்களில் எல்லோருக்கும் இடங்கள் தெரியாது. சென்னையில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்கள்கூட சில இடங்களை தேடி மணிக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிறது. பாவம் வெளியூர் வாசிகள்!
 
ஊரில் இருந்து கிளம்பும்போது பத்திரமாக துண்டுசீட்டில் எழுதி வைத்திருப்பார்கள். கோயம்பேட்டில் இருந்து டி70 அம்பத்தூர் பஸ்சில் ஏறி திருமங்கலத்தில் இறங்க வேண்டும்” இது ஒன்றுதான் அவரின் அடையாளம்.
 
இப்படி ஒரு அடையாளத்தோடு நேற்று மாலை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். பஸ்சிலோ காற்றுபுக கூட இடம் இல்லாதபடி பயணிகள் ஒருவருக்கொருவர் நெருக்கியபடி நின்றனர். இருக்கையில் அமர்ந்து இருந்த கண்டக்டர் “காசை கொடுத்தனுப்பு” என்று உரத்த குரலில் முழங்கினார். பயணிகளில் பலர் ஆண்-பெண் பாரபட்சமின்றி காசுகளை வாங்கி பாஸ் பண்ணி கொண்டிருந்தார்கள். அந்த வாலிபரும் 10 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்து திருமங்கலம் ஒரு டிக்கெட் என்று கேட்டார்.
 
அவ்வளவுதான்!... ஏம்பா உனக்கு போர்டு பார்க்க தெரியாது? என்று ஏக வசனத்தில் கண்டக்டர் திட்டி தீர்த்தார். நாம் என்ன தப்பு செய்தோம். என்று தவித்த அந்த இளைஞரும் விடவில்லை. யோவ்... நான் போர்டு பார்த்துதான் ஏறினேன். திருமங்கலம் என்று போட்டிருக்குதானே. என்று கேட்டார்.
 
அதை கேட்டதும் கண்டக்டருக்கு பிரஷர் ஏறியது. என்னடா ரொம்ப சட்டம் பேசுற. ஒழுங்கா போர்டு பார்த்து பஸ் ஏற தெரியாது. வந்துட்டானுக என்று வெளுத்து கட்டினார். மற்ற பயணிகளும் அந்த வாலிபரை விவரம் புரியாதவன் என்பதுபோல் ஏளனமாக பார்த்தனர்.
 
அதற்குள் வடபழனி வந்தது. அங்கு அந்த வாலிபரை இறக்கி விட்டனர். அந்த வாலிபர் தென் மாவட்டத்தில் இருந்து முதல்முதலாக சென்னை வந்துள்ளார். பட்டதாரியும்கூட.
 
பஸ் போர்டு குழப்பத்தால் படிக்காத முட்டாள் பட்டத்துடன் இறக்கி விடப்பட்டதை நினைத்து கூனி குறுகி போனார். பின்னர் எப்படி பஸ்சை பிடித்து திருமங்கலத்துக்கு போனார் என்பது அவருக்குதான் வெளிச்சம்.
 
வெளியூர்களில் எல்லாம் பஸ்களில் எந்த ஊருக்கு செல்கிறதோ அந்த ஊர் பெயர் மட்டும்தான் இருக்கும். திரும்பி வரும்போது கண்டக்டர், டிரைவர்கள் போர்டை மாற்றுவார்கள். சென்னை மாநகர பஸ்களில் மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
 
இந்த குழப்பத்தால் பெரும்பாலான பஸ்களில் பயணிகள் பஸ் ஏற முடியாமல் பெரும் சிரமப்படுகிறார்கள். ஒவ்வொரு டிரிப்பும் போர்டை மாற்றி வைக்க கண்டருக்கு ஒருசில வினாடிகள்தான் ஆகும். இதனால் பல மணி நேர பயணிகளின் அலைச்சல் மிச்சமாகும்.
 
புத்தாண்டிலாவது இந்த குழப்பம் நீங்கி பயணிகளின் உற்சாகமான பயணத்துக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் வழிகாட்டட்டும்.

No comments:

Post a Comment